பத்து ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள், புகழ், சர்ச்சைகள் என எல்லாவற்றையும் சந்தித்து விட்டேன் என அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
மகேந்திர சிங் டோனி, இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று 10 ஆண்டுகாலத்தை நிறைவு செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்த அணித்தலைவர் என பெயரெடுத்துள்ளார்.
2007ல் டி-20 உலக கிண்ணம் மற்றும் 2011 ஒருநாள் தொடர் உலக கிண்ணத்தை அணிக்கு பெற்றுத் தந்து சாதனை படைத்திருக்கிறார்.
இவரது தலைமையில் இந்திய அணி பல சாதனை வெற்றிகளை பெற்றுள்ளது. அதே நேரத்தில் டெஸ்ட் போட்டியில் அந்நிய மண்ணில் இந்திய அணி தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருப்பதால் பல சர்ச்சைகளுக்கும் ஆளாகியிருக்கிறார்.
10 ஆண்டு கால அனுபவம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இது ஒரு நீண்ட பயணம், ஆனால் காலம் மிக விரைவாக கடந்து விட்டது.
கிரிக்கெட் வீரர்களை பொறுத்த வரையில், குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவிட முடியாது. எப்போதுமே போட்டி அல்லது எங்காவது பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
வருடத்தின் ஒன்பதரை மாதங்கள் நாங்கள் குடும்பத்தை பிரிந்துதான் இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் மட்டுமே நமக்கு வாய்ப்புகள் கிடைக்கும், அந்த காலகட்டம் மிகவும் குறுகியது.
அதனால் ஒவ்வொரு போட்டியையும் அதிக கவனத்துடன் சிறப்பாக ஆட வேண்டும். அதே நேரத்தில் காயங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரக்கூடியவை என்பதையும் மனதில் வைத்து கவனமாக ஆட வேண்டும்.
இந்த 10 ஆண்டில் நிறைய கற்றுக் கொண்டேன். அதில் முக்கியமானது தாழ்மையுடன், அமைதியாக இருப்பது. கிரிக்கெட்டில் ஏற்றம், இறக்கம் சகஜம்.
தொடர்ந்து வெற்றி பெறும் போது கர்வமடைந்து எந்தளவுக்கு அதனை வெளிப்படுத்துகிறீர்களோ, அதே அளவுக்கான சர்ச்சைகள் தோல்வி பெறும் போது திரும்ப வரும்.
மொத்தத்தில் இந்த 10 ஆண்டில் அனைத்தையும் சந்தித்து விட்டேன், அதுவும் நல்லதுக்காகத்தான், 10 ஆண்டுகளை கடந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

 
No comments:
Post a Comment