Sunday, December 28, 2014

கயல் படத்தில் ஈழத் தமிழன்....

தமிழ்த் திரைப்படங்களுக்கு இன்று உலக அளவில் மிகப் பெரும் வியாபாரம் நடைபெற்று வருவதற்கு முழுமுதற் காரணமாக இருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான். சுமார் 30 வருடங்களுக்கு முன் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறிய அவர்களால்தான் இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் ஈழத் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். தமிழர்களாக இருந்தாலும் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து செயல்படும் தமிழ்த் திரையுலகத்தில் நடிகர்களாகவே, தொழில்நுட்பக் கலைஞர்களாகவோ பெரிதும் புகழ் பெற்றதில்லை.

அவர்களுக்கு அப்படி ஒரு நல்ல வாய்ப்பையும் எந்த இயக்குனரும் கொடுத்ததில்லை. ஆனால், அண்மையில் வெளிவந்துள்ள 'கயல்' படத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஈழத் தமிழரான நகுலன் என்பவரை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் பிரபு சாலமன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

படம் முழுவதும் வரும் அவருடைய கதாபாத்திரம் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் புலம் பெயர் தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் வசிக்கும் பல சின்னஞ் சிறிய நகரங்களில் கூட ஈழத் தமிழர்கள் கூட்டாகச் சேர்ந்து 'கயல்' படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார்களாம்.

இதற்கு முன் 'ஆடுகளம்' படத்தில் ஈழத் தமிழ்க் கவிஞரான வ.சு.ஜெயபாலன் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தொடர்ந்து சில படங்களில் நடித்தார். 'கயல்' படத்தில் வின்சென்ட் என்ற பெயருடன் அறிமுகமாகும் நகுலன் 8 வயதாக இருக்கும் போது ரஜினிகாந்த் பட போஸ்டர் ஒன்றைப் பார்த்து தானும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதாக படத்தின் இசை வெளியீட்டின் போதே தெரிவித்திருந்தார்.

வின்சென்ட்டுக்கு 'கயல்' படம் திரையுலகில் ஒரு வெற்றிகரமான வாசலைத் திறக்க வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment