Sunday, December 28, 2014

ISIS உடன் சேரச் செல்ல முயன்ற 6 பேரைக் கைது செய்தது இந்தோனேசியா

சனிக்கிழமை இந்தோனேசியா போலிசார் தமது நாட்டில் இருந்து ISIS உடன் இணைவதற்காக சிரியா செல்ல முயன்ற 6 பேரை ஜகார்த்தா சோயேகர்னோ ஹட்டா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

போலியான கடவுச் சீட்டுக்களுடன் கைதான இந்த 6 பேரில் 10 வயதுக் குழந்தையுடன் ஓர் திருமண ஜோடியும் அடங்குகின்றனர். மேலும் இப்பயணிகளைத் தொடர்ந்து இவர்களது பயணத்தை ஏற்பாடு செய்திருந்த நபரும் கைது செய்யப் பட்டுள்ளார்.

கைதான பின் பயணிகளிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணையின் போதே ஜிஹாதிஸ்ட் போராளிகளுடன் இணைய இவர்கள் முயன்றது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இவர்களது பயணத்தை ஒழுங்கு செய்தவர் மற்றும் பயணத்துக்கான நிதிப் பங்களிப்பை அளித்தவர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. உலகில் மிக அதிக சனத்தொகை கொண்ட முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இருந்து ISIS உடன் இணைவதற்காக ஜூன் மாதம் 86 பேரும் ஆக்டோபரில் 264 பேரும் சிரியா மற்றும் ஈராக்கை நோக்கிச் சென்றுள்ளதாக BNPT எனப்படும் இந்தோனேசியாவின் தேசிய தீவிரவாதத் தடுப்பு ஏஜன்ஸி தெரிவித்துள்ளது.

மேலும் இவ்விடயம் தொடர்பில் BNPT அமைப்பின் தலைவர் சௌட் உஸ்மான் நாசுசன் ஜகார்த்தா போஸ்ட் பத்திரிகைக்கு அளித்துள்ள செய்தியில், இதுவரை ISIS அமைப்பில் சேர்ந்து போராடுவதற்காக 514 இந்தோனேசியர்கள் இங்கிருந்து ஈராக்கும் சிரியாவுக்கும் சென்று சேர்ந்துள்ளனர் எனவும் இதில் அரைவாசிப் பேர் மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஊழியர்கள் ஆவர் எனவும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment