Friday, December 26, 2014

பாதிக்கப்பட்டோரை நேரில் சந்திக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: மனம்திறக்கும் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)

ஈராக்கில் தண்டனைக்கு உள்ளான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், தங்களால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து பேசும் தொலைகாட்சி நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில் தீவிரவாதிகளால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை இளைஞர்களிடையே பரப்ப ஈராக் அரசு முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஈராக் அரசின் அல் ஈராக்கி தொலைகாட்சியில், 'சட்டத்தின் பிடியில்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், தண்டனைக்கு உள்ளான ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கைதிகளுக்கான மஞ்சள் உடையுடன், அவர்கள் குற்றம் புரிந்த இடத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அங்கு குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறை சம்பவங்கள் எப்படி நிகழ்த்தப்பட்டன என்பதை கைதிகள் நடித்து காட்டுகின்றனர்.

இதன்பின் இச்சம்பவங்களில் உயிரிழந்தோரின் உறவுகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் அழைத்து வரப்பட்டு நிகழ்ச்சி தொகுப்பாளரான அகமது ஹசன், இரு தரப்பிலும் பல கேள்விகளை முன்வைக்கிறார்.

இதன் மூலம், பார்வையாளருக்கு, தீவிரவாதத்தால் உண்டாகும் பயங்கர விளைவுகள், பாதிப்புகள் உள்ளிட்டவற்றில், ஒரு தெளிவான பார்வை கிடைப்பதாக கூறப்படுகிறது.

அரசு அனுமதி பெற்று நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், குண்டுவெடிப்பில் உடல் உறுப்புகளை இழந்தோர், உறவுகளை தொலைத்தோர், ஆத்திரத்தில் கைதிகளை அடிக்கப் பாய்ந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளன.

இதற்கிடையே இந்நிகழ்ச்சிக்கு, மனித உரிமைகள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment