சென்னையில் பட்டப்பகலில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட திருடர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துரைப்பாக்கம் எம்சிஎன் நகர் 2-வது சந்து பகுதியை சேர்ந்தவர் வேலம்(வயது 39), தனியார் பள்ளி ஆசிரியையான இவர் கடந்த 21ம் திகதி பள்ளி முடிந்து ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் ஸ்கூட்டியின் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
பைக்கில் வந்த இளைஞர் கத்தியை காட்டி மிரட்டி, தாலி செயின் உள்ளிட்ட 14 சவரன் நகைகளை வேலத்திடம் இருந்து பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றார்.
இந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ தொடங்கியது.
இதையடுத்து சென்னை பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
விசாரணையில், வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற இடங்களிலும் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டதும், இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது.
உடனடியாக தூத்துக்குடி விரைந்த பொலிஸ் அதிகாரிகள் வழிப்பறி கொள்ளையன் அரிகிருஷ்ணன்(வயது 32) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர், நீராவி முருகன் என்ற மற்றொரு கொள்ளையனை தேடி வருகின்றனர்.
அரிகிருஷ்ணன் கூறுகையில், தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த நீராவி முருகனும், நானும் சேர்ந்துதான் துரைப்பாக்கத்தில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்தோம்.
வழிப்பறி செய்வதில் கில்லாடியான நீராவி முருகன், திமுகவை சேர்ந்த ஆலடி அருணா கொலை வழக்கு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி, மதுரையில் இருமுறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருக்கிறார். அவர் வைத்திருக்கும் பையில் கத்தி மற்றும் மாற்று உடை இருக்கும். கொள்ளை அடித்துவிட்டு, உடனே வேறு உடையை மாற்றி விடுவார். இதுவரையிலும் 100 சவரன் நகைகளுக்கு மேல் கொள்ளை அடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

 
No comments:
Post a Comment