Sunday, December 28, 2014

162 பேருடன் சிங்கப்பூர் அருகே மாயமானது மற்றுமொரு மலேசிய விமானம் : தொடரும் பதற்றம்!

இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற ஏர் ஏசிய விமானம் இன்று ஞாயிற்றுக் கிழமை 155 பயணிகள் மற்றும் 7 பணிக்குழுவினருடன் காணாமல் போயுள்ளது.

காலை 8.30 மணிக்கு சிங்கப்பூரை சென்றடைய வேண்டிய ஏர் ஏசிய விமானம், 7.42 மணிக்கு கட்டுப்பாட்டு தொடர்பிலிருந்து திடீரென துண்டிக்கப்பட்டு விட்டதாக சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

விமானம் ஜாவா கடற்பகுதிக்கு மேல் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்ததாக இந்தோனேசிய போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன நடந்தது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதோடு மேலும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்புதிய விமான மாயம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தற்போது காணாமல் போயுள்ளதும் மலேசியாவுக்கு சொந்தமான ஏர் ஏசிய விமானம் என்பது மலேசியர்களை மேலும் கவலை அடைய செய்துள்ளது. QZ8501 எனும் விமானமே தற்போது மாயமாகியுள்ளது. இந்த வருடத்தில் இவ்வாறு மாயமாகியிருக்கும் மூன்றாவது மலேசிய விமானம் இதுவாகும்.

இறுதியாக கிடைத்த தகவல்களின் படி மோசமான காலநிலை காரணமாக குறித்த விமானத்தின் பாதையை மாற்றுவதற்கு விமானி அனுமதி கோரியுள்ளார்.

குறித்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 156 இந்தோனேசியர்களும், மூன்று தென் கொரியர்களும் ஒரு பிரெஞ்சு நாட்டவரும், ஒரு மலேசியரும், ஒரு சிங்கப்பூர் வாசியும் அடங்குவர். அதோடு 17 குழந்தைகள் அடங்குவர்.

No comments:

Post a Comment