கீழக்கரை நகராட்சி அ.தி.மு.க பெண் கவுன்சிலர் மீனா என்பவர் வீடுகளில் பாத்திரம் தேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே சொகுசு கார்களில் கவுன்சிலர்கள் வலம் வருகின்றனர்.
ஆனால் இவர், வீடுகளில் பாத்திரம் தேய்த்து கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறார்.
முத்துச்சாமிபுரத்தில் ஓட்டு வீட்டில் வசித்து வரும் இவர், அ.தி.மு.கவின் நீண்டகால விசுவாசி.
கணவர் கொத்தனார் பணி செய்கிறார். இவர்களுக்கு மகன், 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. அன்றாடம் பாத்திரம் தேய்த்தால் தான் வீட்டில் சாப்பாடு, இல்லையேல் பட்டினி என்ற நிலை.
இவரது வார்டு அருந்ததியினருக்கு ஒதுக்கப்பட்டதால், தேர்தலில் நிற்க 500 ரூபாய் தான் டிபாசிட் தொகை. அதையும் கட்சியினர் தான் கட்டினர். தேர்தல் செலவையும் அவர்கள் தான் பார்த்துக் கொண்டனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, 'இரண்டு வீடுகளில் கடந்த 20 ஆண்டுகளாக சமையல் பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கிறேன். இதற்கு சம்பளம் தலா 600 ரூபாய். காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை வேலை.
பின், எனது வீட்டிற்கு சென்று சமையல் செய்வேன், நகராட்சி கூட்டத்தில் மக்களின் கோரிக்கையை வலியுறுத்துவேன். என்னால் முடிந்த அளவு மக்கள் பணி செய்கிறேன், ஒரு சிலர் என்னை ஏளனமாக பார்த்தாலும் கண்டு கொள்வதில்லை.
பிறர் நம்மை வசதி மிக்கவர்களாக பார்க்கவேண்டும் என்பதற்காக, கடன்வாங்கி பகட்டு காண்பிப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும் என்றும் உழைத்து பிழைத்தால் மட்டுமே நிம்மதியாக தூங்கலாம் எனவும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment