Wednesday, December 24, 2014

நீலாங்கரை கடற்கரையில் காதலனை விரட்டிவிட்டு கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு....

நீலாங்கரை அருகே கடற்கரையில் காதலனை விரட்டிவிட்டு கல்லூரி மாணவி கடத்தி சென்று கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் உடையில் வந்த மர்ம ஆசாமி யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடற்கரைக்கு வந்த காதல் ஜோடி

சென்னையை அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் கயல் (வயது 19) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2–ம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கவுதம் (19) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவர் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர்.

நேற்றுமுன்தினம் மாலை கவுதம் தனது காதலி கயலுடன் நீலாங்கரை அருகே உள்ள அக்கரை கடற்கரைக்கு வந்தார். கடற்கரையில் சிறிது நேரம் பேசிவிட்டு மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றனர்.
போலீஸ் உடையில் வந்த ஆசாமி

அப்போது காக்கி நிற பேண்ட், வெள்ளை நிற சட்டை அணிந்த ஒருவர் அங்கு வந்தார். தன்னை ‘போலீஸ்’ என்று கூறிய அவர், காதல் ஜோடியை மிரட்டினார்.

இருவரது பெயர்களை கேட்ட அவர், கயலிடம் ‘உன்னை காணவில்லை என புகார் கூறி உன் பெற்றோர் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் இருக்கிறார்கள். நீ காதலனுடன் ஊர் சுற்றுகிறாயா?’ என்று கூறினார்.

பின்னர் கயலை மிரட்டி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றினார். மேலும், செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கவுதமிடம் கூறி விட்டு சென்று விட்டார். கவுதம் தனது நண்பர்களுடன் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
போலீஸ் என்று கூறி கடத்தல்

அங்கு கயல் இல்லாததை கண்டதும் அவரது செல்போனிற்கு தொடர்பு கொண்டபோது, செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. போலீஸ் நிலையத்தில் விசாரித்தபோது அதுபோல் யாரும் இங்கு வரவில்லை என்று கூறினர்.

அப்போது தான் கயலை அழைத்துச்சென்றவர் உண்மையான போலீஸ்காரர் இல்லை, போலீஸ் என்று கூறி ஏமாற்றி கடத்திச்சென்றது தெரியவந்தது.

இந்தநிலையில் இரவு 9 மணியளவில் கயல், கவுதமின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு கதறி அழுதார். தன்னை அழைத்துச் சென்றவர் பாலியல் தொல்லை செய்து சோழிங்கநல்லூர் சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு சென்றதாக கூறினார். உடனே கவுதம் விரைந்து சென்று கயலை அழைத்து வந்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

சம்பவம் நடந்த பகுதி நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் இந்த வழக்கு அங்கு மாற்றப்பட்டது. கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தரப்பட்டு வரவழைக்கப்பட்டனர். மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடத்தி கற்பழிப்பு

விசாரணையில், கல்லூரி மாணவியை கடத்திச்சென்ற ஆசாமி இருட்டான பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் கற்பழித்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்த அக்கரை சோதனை சாவடி பகுதியிலும், சோழிங்கநல்லூர் சுங்க சாவடி பகுதியிலும் கண்காணிப்பு கேமரா உள்ளது. இதில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலைவீச்சு

கடந்த சில தினங்களுக்கு முன்பு துரைப்பாக்கத்தில் நடந்து சென்ற பள்ளி ஆசிரியையிடம் கத்தியை காட்டி வழிப்பறி நடந்தது. தற்போது போலீஸ் என கூறி கல்லூரி மாணவியை கடத்திச்சென்ற கற்பழிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலாங்கரை பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதல்ஜோடிகளிடம் ‘போலீஸ்’ என மிரட்டி வழிப்பறி சம்பவங்கள் நடக்கும். போலீசார் நடத்திய அதிரடி சோதனை காரணமாக ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் சம்பவங்கள் நடக்க தொடங்கி உள்ளது. ஆனால் கற்பழிப்பு சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதனையடுத்து போலீஸ் உடையில் வந்த ஆசாமியை பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் அடையாறு துணை கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment