அமெரிக்கக் கூட்டுப் படைகள் சிரியாவிலும் ஈராக்கிலும் ISIS இற்கு எதிராக வான் தாக்குதல்களைத் தொடக்கி பல மாதங்களாகியுள்ள நிலையில் முதன் முறையாக இன்று புதன்கிழமை ஜோர்டானிய யுத்த விமானம் ஒன்றை வடக்கு சிரியாவில் ISIS சுட்டு வீழ்த்தியுள்ளது.
மேலும் தானியங்கி முறையில் அந்த விமானத்தில் இருந்து தப்பித்து பாரசூட் உதவியுடன் கடலில் வீழ்ந்த ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பைலட்டையும் கைப்பற்றி மறைவிடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ISIS ஜிஹாதிஸ்ட்டுக்கள் ரக்கா நகருக்கு அண்மையில் ஹீட் சீக்கிங் ஏவுகணை மூலம் குறித்த யுத்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் கைப்பற்றப் பட்ட பைலட்டான லெப்டினன்ட் மோவஷ் யூஸ்ஸெஃப் அல்-கசாபே சம்பந்தப் பட்ட புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். செப்டம்பரில் சிரியா மீது அமெரிக்கக் கூட்டுப் படைகள் விமானத் தாக்குதலை ஆரம்பித்தது முதற்கொண்டு ISIS ஆல் சுட்டு வீழ்த்தப் பட்டுக் காணாமற் போன முதல் விமானம் இதுவாகும். மேலும் அமெரிக்காவுடன் இணைந்து சிரியாவில் வான் தாக்குதல்களை நடத்தி வரும் 4 அரபு தேசங்களில் ஜோர்டானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சுட்டு வீழ்த்தப் பட்ட விமானம் F-16 ரக போர் விமானம் என அடையாளம் காணப் பட்டுள்ளதுடன் இதன் சிதைவடைந்த பாகங்கள் சம்பந்தப் பட்ட புகைப் படங்களையும் இணையத் தளத்தில் ISIS வெளியிட்டுள்ளது. சமீப காலமாக ISIS கட்டுப்பாட்டிலுள்ள சிரிய நகரான ரக்காவை அவர்கள் வசம் இருந்து மீட்பதற்கு அமெரிக்கக் கூட்டுப் படைகள் தமது விமானத் தாக்குதல்களை அதிகரித்திருந்தன. இந்நிலையில் ISIS முன்னர் தாம் கைப்பற்றியிருந்த ஜேம்ஸ் ஃபோலே உட்பட அமெரிக்காவின் இரு பத்திரிகையாளர்கள் மற்றும் ஏனைய சில சர்வதேசப் பிணைக் கைதிகளைச் சிரச்சேதம் செய்திருந்தன. இதனால் தற்போது கைப்பற்றப் பட்டுள்ள குறித்த ஜோர்டானின் பைலட்டின் கதி என்னவாகும் என்ற கவலையும் உலக நாடுகளை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment