ஆந்திர சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரில் நடிகை ரோஜா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
நேற்று நடந்த குளிர்கால கூட்டத்தில் எதிர்க் கட்சியான ஒய்.எஸ்.ஆர். கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.எல்.ஏ. விஷ்வேஸ்வர ரெட்டி பேசும்போது, ஆனந்தபுரம் மாவட்டத்தில் சராசரி அளவை விட குறைந்த அளவு மழை பெய்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பேசி கொண்டிருக்கும் போது ‘மைக்’ இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அதன்பின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. கோரண்ப்பா புச்சய்ய சவுத்ரிக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. தங்கள் கட்சி எம்.எல்.ஏ. பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா மற்றும் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று வாக்குவாதம் செய்தனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.
அப்போது, கோரண்ப்பா புச்சய்ய சவுத்ரி பேசுகையில், சினிமா, தொலைக்காட்சி தொடரில் ரோஜா வில்லியாக நடித்திருக்கலாம். இதுபோல இங்கும் (சட்டசபை) நடந்து கொள்கிறார் என்றார்.
திரைப்பட கலைஞர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி ரோஜா கண்ணீர் விட்டு அழுதார். இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் சபை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டசபைக்கு வெளியே ரோஜா நிருபர்களிடம் கூறுகையில், நடிகரான என்.டி.ராமராவ் தொடங்கிய கட்சி தெலுங்கு தேசம், தற்போது சந்திரபாபு நாயுடு தலைமையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி திரைப்பட கலைஞர்களை மதிக்கவில்லை, விரைவில் அவர் வருத்தப்படும் நேரம் வரும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

No comments:
Post a Comment