இந்திய- அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை தொடங்குகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 48 ஓட்டங்களிலும், பிரிஸ்பேனில் நடந்த 2வது டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்றது.
இந்நிலையில் மெல்போர்ன் நகரில் நாளை தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்த்து `ஹாட்ரிக்’ தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிரம் காட்டும்.
ஆனால் மெல்போர்ன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் ‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்ப்பது என்பது சவாலான ஒன்றாகும்.
கடந்த 2 டெஸ்டில் அவுஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்று விடவில்லை. இந்திய வீரர்கள் கடுமையாக போராடி தான் தோல்வி சந்தித்தனர். இதற்கு முந்தைய சுற்றுப் பயணத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொடரில் துடுப்பாட்டத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே குறைந்த பட்சம் ‘டிரா’ செய்ய முடியும்.
துடுப்பாட்டத்தில் தொடக்க வீரர்கள் முரளிவிஜய், ஷிகார் தவான், விராட் கோஹ்லி, ரஹானே, புஜாரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ரோஹித் சர்மாவின் துடுப்பாட்டம் சுமாராகவே உள்ளது. இதனால் அவர் இடத்தில் ரெய்னாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
இதேபோல பந்துவீச்சில் வருண் ஆரோனுக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் இடம் பெறுவார்.
அவுஸ்திரேலியா தரப்பில், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு சமபலத்துடன் இருக்கிறது. அதனால் இந்த டெஸ்டிலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் அவுஸ்திரேலியா உள்ளது.
வார்னர், ரோஜர்ஸ், வாட்சன் போன்ற சிறந்த துடுப்பாட்டக்காரர்களும், ஜான்சன், ஸ்டார்க், ஹாசில்வுட், லயன் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர்.

No comments:
Post a Comment