Wednesday, December 24, 2014

அமெரிக்காவின் முன்னால் அதிபர் ஜோர்ஜ் H.W புஷ் வைத்தியசாலையில் அனுமதி

ஈராக் மீது அமெரிக்கா முதன் முறை போர் நடவடிக்கையை மேற்கொண்ட போது அதிபராகப் பதவி வகித்த ஜோர்ஜ் H.W.புஷ் (சீனியர்) அண்மையில் சுவாசக் கோளாறு காரணமாக டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹௌஸ்டன் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

1989 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவின் 42 ஆவது அதிபராகக் கடமையாற்றிய ஜோர்ஜ் H.W புஷ் இற்குத் தற்போது 90 வயதாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவுக்கு முன்பு அதிபராகக் கடமையாற்றிய ஜோர்ஜ் W புஷ் இனது தந்தையான இவர் முன்னெச்சரிக்கை மற்றும் மருத்துவ கண்காணிப்புக் காரணங்களுக்காகவே மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோர்ஜ் H.W புஷ் அவருக்கு முன் அதிபராகக் கடமையாற்றிய ரொனால்ட் ரீகனின் நிர்வாகத்தில் துணை அதிபராகவும் கடமையாற்றி இருந்தார். மேலும் இவர் 2 ஆம் உலக யுத்தத்தின் போது கடற்படை பைலட்டாக வீரத்துடன் செயலாற்றிய இராணுவ வீரர் என்ற புகழையும் உடையவர் ஆவார். மேலும் இச்சமயத்தில் இவர் ஒரு தடவை சுடப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் இவரது வெள்ளை மாளிகை சுயசரிதை கூறுகின்றது.

ஜோர்ஜ் H.W புஷ் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு நவம்பரிலும் மூச்சுக் குழாய் அழற்சி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போதும் இரு மாதங்களில் உடல் நலம் தேறி வீடு திரும்பியிருந்தார். தற்போது இவர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென அதிபர் ஒபாமா மற்றும் முதற் பெண்மணி மிச்சேல் ஒபாமா ஆகியோர் தமது வேண்டுதல்களை புஷ் குடும்பத்தினருக்கு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment