Wednesday, December 24, 2014

டக்ளஸ் தேவானந்தாவே தேடிவந்து சந்தித்தார்; நான் தமிழ் மக்களுக்கு துரோகியல்ல: பாரதிராஜா

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் எமது தொப்புள்கொடி உறவு. அவ்வாறான நிலையில், அவர்களுக்கு நான் என்றைக்குமே துரோகமிழைக்க மாட்டேன் என்று தென்னிந்திய சினிமா இயக்குனரான பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான தன்னுடைய விஜயத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தான் சந்திக்க திட்டமிருக்கவில்லை என்றும், அவராகவே வந்து நேரில் சந்தித்ததாகவும் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “உலகில் வாழ்கின்ற தமிழரின் பூர்வீகம் ஒரே இடத்திலிருந்து ஆரம்பமாகின்றது. இந்தத் தமிழருக்கு துயர் வரும்போது, இந்த பாரதிராஜா குரல் கொடுப்பான். ஆனால், அது ஒரு அரசியல்வாதியாக இல்லை. இலங்கைத் தமிழரும் எமது தொப்பிள்கொடி உறவு. அவர்களுக்கு நான் ஒருபோதும் தீங்கிழைக்கமாட்டேன்.

நான் அகிலன் பவுண்டேசன் நிறுவுனர், நண்பர் கோபாலகிருஸ்ணனின் அழைப்பின் நிமித்தம் அறக்கட்டளை சார்பாக கலைஞர்களை சந்திப்பதற்கு இலங்கை வந்தேன். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைஞர்களை சந்தித்தேன். நான் அங்கு தங்கியிருந்தபோது, இந்தியத் தூதரகத்திலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் இலங்கை அமைச்சர் ஒருவர் என்னை சந்திக்க வரவுள்ளதாக கூறினர். அமைச்சர்களை நாமே போய் சந்திக்கவேண்டும். ஆனால், அமைச்சரே என்னை சந்திப்பதற்கு வருகிறார் என்று அப்போது நான் நினைத்தேன்.

இந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வந்து என்னை சந்தித்தார். மீனவர்களின் பிரச்சினை பற்றி பேசுவதற்கு முற்பட்டார். அப்போது அவரிடம் 'கலைஞர்களை சந்திப்பதற்காகவே நான் இங்கு வந்தேன். அரசியல் பேசுவதற்கு அல்ல' எனக் கூறினேன். அப்போது அவருடன் சேர்த்து என்னை புகைப்படங்கள் எடுத்தனர். அந்தப் புகைப்படங்களை இணையத்தளங்களில் தரவேற்றம் செய்து, பாரதிராஜா இந்த அமைச்சரை சந்தித்தார். இவர் அரசின் கைக்கூலியாக வந்திருக்கிறாரோ என்ற விடயத்தை பாரதிராஜாவின் மேல் புள்ளியிட்டு, அதை உலகம் முழுதும் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இதை நான் இந்த இடத்தில் கூறிவில்லையெனின், நாகரிகம் அற்றவனாகிவிடுவேன்.

அறக்கட்டளை சார்பாக இங்குள்ள கலைஞர்களை சந்திப்பதற்கும் அவர்களை கௌரவிப்பதற்கும் நான் இங்கு வந்தேன். அந்த அமைச்சர் என்னை வந்து சந்தித்த விடயத்தை உலகம் முழுதும் பரப்பி, உலகத் தமிழர் மத்தியில் என் மீது அவப்பெயரை உண்டாக்க சிலர் நினைக்கின்றனர். இந்த உண்மைக்குப் புறம்பான விடயத்தை ஊடகவியலாளர்களை கூட்டிக் கூறவேண்டும் என்று நினைத்தேன். என்னை எவரும் கைக்கூலி என்று கூறமுடியாது என்று இங்கு நான் கூறுகின்றேன்;.

முப்பது, நாற்பது வருடங்களாக மூன்று, நான்கு முதலமைச்சர்களை பார்த்துவிட்டேன். தமிழ்நாட்டில் நான் அரசியலில் இறங்கியிருந்தால் மிகப்பெரிய அதிகாரத்தில் இருந்திருப்பேன். ஆனால், நான் அதை விரும்பவில்லை. நல்ல கலைஞனாக வாழ்ந்து சாகவேண்டும் என்று நான் நினைக்கின்றேன்' என்றுள்ளார்.

No comments:

Post a Comment