ஐந்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர், கோபிநாத், உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் கட்சி முக்கியஸ்த்தர்கள் நேரடியாக விஜயம் செய்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டதோடு, தற்காலிகமாக தங்கியிருக்கும் இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு அவர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டனர்.
பாதிப்பிற்கு உள்ளான மக்கள் பாடசாலைகளிலும், தங்களது உறவினர் வீடுகளிலும் பொழுதை கழிக்கவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளார்கள். இவர்களுக்கான உடனடி தேவைகளை உரிய அதிகாரிகளுடன் பேசி அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக பெற்றுக்கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
துறைவந்திய மேட்டு கிராம மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதுடன், அவர்களுக்கான தரைவழழிப்பாதை முற்றிலும் வெள்ளநீரினால் சூழ்ந்துள்ளதனால் இப்பிரதேச மக்கள் வள்ளத்தின் மூலமே தங்களது முக்கியமான பிரயாணங்களை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கான நிவாரணங்களும் வள்ளங்கள் மூலமே கொண்டு செல்லப்படுகின்றன. கல்முனையிலிருந்து கிட்டங்கியூடாக நாவிதன்வெளி செல்லும் பிரதான வீதியும், காரைதீவு மாவடிப்பள்ளி வீதியால் அதிக நீர் நிரம்பி வடிவதனால் இதனூடான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment